தமிழ்ப் புலவி - ஔவையார்


தமிழ்ப் புலவி ஔவையார் எல்லாத் தமிழருக்கும் நன்கு அறிமுகமான ஒரு புலவராவர்.


தமிழ் தாயை திருத்தொண்டினால் போற்றியவர்கள் நாலு வகைப்படுவர். முதலில் பிறைசூடிக்கடவுளும் அவர் திருமகனாகிய முருகனும் தெய்வ வகையினராவர். தேவ வகையை சேர்ந்த இந்திரன் இரண்டாம் வகையினன். மூன்றாவதாக அகத்தியன், இவர் முனிவ வகையினராவர். நான்காவதாக மானிட வகையினர், இதில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் அடங்குவர். பிற இனங்களும் நாகரியங்களும் பண்டைய காலத்தில் பெண்களுக்கு அறிவு கூடாதென்று, பெண்களை அடக்கிய காலத்தில், தமிழரிடையே ஔவையார், வெள்ளி வீதியார், பூதபாண்டியன் தேவியார், ஆதிமந்தியார் போன்ற பல பெண் தமிழ்ப் புலவிகள் கடைச் சங்க காலத்தில் நிலவினர் என்பது தமிழர்களின் உயர்ந்த பண்பாடுக்கு ஒரு உதாரணமாகும். இவர்களுக்குள் ஔவையார் தலைசிறந்தவராவார்.


இவர் தமிழறிவுடன் பிறந்தவர் என்பர். பெற்றாருண்டி மறந்தவர். பாணரகத்தில் வளர்ந்தவர்.சிவபரத்துவந் தெளிந்தவர். வரகவித்துவம் அமைந்தவர். இலௌகிகம், வைதிகம் இரண்டுந் தெரிந்தவர். உள்ளம், உண்மை, மொழி எனும் மூன்றும் சிறந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறிந்தவர். தமிழ்நாடெங்குந் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் பலநாள் இருந்தவர்.


பலர்மீதுங் கவிபாடிப் பரிசு பெற்றவர். பரிசு கொடுத்தவர் சிறியராயினும், வறியராயினும் அவரைப் பெரியராக மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பராமுகஞ் செய்தாரையும், பாடலருமை அறிய மூடரையும் வெறுத்துப் பாடியவர்.

No comments:

Post a Comment