தெய்வப்புலவர் - திருவள்ளுவர்



திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி.


திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.


திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.


இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.


தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது தவிர சென்னையில் வள்ளுவர் கோட்டம் ஒன்றும் அமைத்துள்ளது.

தமிழ்ப் புலவி - ஔவையார்


தமிழ்ப் புலவி ஔவையார் எல்லாத் தமிழருக்கும் நன்கு அறிமுகமான ஒரு புலவராவர்.


தமிழ் தாயை திருத்தொண்டினால் போற்றியவர்கள் நாலு வகைப்படுவர். முதலில் பிறைசூடிக்கடவுளும் அவர் திருமகனாகிய முருகனும் தெய்வ வகையினராவர். தேவ வகையை சேர்ந்த இந்திரன் இரண்டாம் வகையினன். மூன்றாவதாக அகத்தியன், இவர் முனிவ வகையினராவர். நான்காவதாக மானிட வகையினர், இதில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் அடங்குவர். பிற இனங்களும் நாகரியங்களும் பண்டைய காலத்தில் பெண்களுக்கு அறிவு கூடாதென்று, பெண்களை அடக்கிய காலத்தில், தமிழரிடையே ஔவையார், வெள்ளி வீதியார், பூதபாண்டியன் தேவியார், ஆதிமந்தியார் போன்ற பல பெண் தமிழ்ப் புலவிகள் கடைச் சங்க காலத்தில் நிலவினர் என்பது தமிழர்களின் உயர்ந்த பண்பாடுக்கு ஒரு உதாரணமாகும். இவர்களுக்குள் ஔவையார் தலைசிறந்தவராவார்.


இவர் தமிழறிவுடன் பிறந்தவர் என்பர். பெற்றாருண்டி மறந்தவர். பாணரகத்தில் வளர்ந்தவர்.சிவபரத்துவந் தெளிந்தவர். வரகவித்துவம் அமைந்தவர். இலௌகிகம், வைதிகம் இரண்டுந் தெரிந்தவர். உள்ளம், உண்மை, மொழி எனும் மூன்றும் சிறந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறிந்தவர். தமிழ்நாடெங்குந் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் பலநாள் இருந்தவர்.


பலர்மீதுங் கவிபாடிப் பரிசு பெற்றவர். பரிசு கொடுத்தவர் சிறியராயினும், வறியராயினும் அவரைப் பெரியராக மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பராமுகஞ் செய்தாரையும், பாடலருமை அறிய மூடரையும் வெறுத்துப் பாடியவர்.

டாக்டர் மு. வரதராசன் (1912 - 1974)


மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார்.

இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், , கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.1944ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார். மு.வ. எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன.

டாக்டர் மு.வரதராஜன் அக்டோபர் 10, 1974ல் தனது 62வது அகவையில் சென்னையில் இயற்கை எய்தினார்.

ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)


ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர். இவர் தமிழில் சொற்பொழிவு அற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் 1896 ஆம் ஆண்டு பிறந்தார். பி.ஏ, பி.எல் பட்டங்களைப் பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் திருவள்ளுவர் நூல்நயம், தமிழகம் ஊரும்பேரும், தமிழின்பம் என்பன உள்ளிட்ட பதினேழு உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சிறந்த செந்தமிழ் நடைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது. 1961 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.

"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்." (-ரா. பி. சேதுப்பிள்ளை)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)



பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்."எங்கெங்கு காணினும் சக்தியடா! - தம்பிஏழுகடல் அவன் வண்ணமடா.."என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்த பொழுது, பாரதியாரின் "தராசு", "எழுக புலவன்" என்று ஆசிர்வதித்தது. அன்று முதல் பாரதிதாசன் ஆகிவிட்ட ஸ்ரீ கனகசுப்புரத்தினம், பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார்.புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றியவர். புரட்சிக் கனல் தெறிக்கும் இவர் பாடல்கள், தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு முதலான பல கவிதை நூல்களை இவர் படைத்துள்ளார்.

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது.கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

வலியோர் சிலர் எளியோர்தமைவதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்நிலையாமெனும் நினைவா?
உலகாளஉ னது தாய்மிகஉயிர்வாதை யடைகிறாள்!
உதவாதினி ஒரு தாமதம்உடனேவிழி தமிழா! (-பாரதிதாசன்)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (1882 - 1921)


சுப்பிரமணிய பாரதியார் தோன்றிய ஊர் எட்டயபுரம். இளமையிலேயே கவி காடும் ஆற்றல் கைவரப் பெற்றவர். பாட்டுத்திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவர். நாட்டு விடுதலைக்குக் கிளர்ந்தெழுந்த கவிச்சிங்கம். இந்நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர். நீடு துயில் நீக்கப் பாடிவந்த முழுநிலவு. இவர்தம் படைப்புக்ள் பல. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு போன்றவை தமிழர்தம் உள்ளங்களை ஆட்டிப்படைப்பவை. கவிதை, கதை, கட்டுரை, ஆராய்ச்சி முதலிய பலதுறைகளிலும் தொண்டு புரிந்தவர்.

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'. அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேகபாநு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார். 1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார். அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார். இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார். அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.

பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான். அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன. புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார். 1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். 1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.

யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்!
பாமரராய், விலங்குகளாய்,
உலகனைத்தும்இகழ்ச்சிசொலப்
பான்மை கெட்டுநாமமது தமிழரெனக்
கொண்டுஇங்குவாழ்ந்திடுதல் நன்றோ?
சொல்லீர்!தேமருரத் தமிழோசை
உலகமெல்லாம்பரவும்
பகை செய்தல் வேண்டும். (- மகாகவி பாரதி.)

வ.உ.சிதம்பரம்பிள்ளை (1872 - 1936)



விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் ஒருவர். "கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" என்றெல்லாம் விளங்கும் வ. உ. சிதம்பரம் பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் தோன்றியவர் இவர்; நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு நலிவுற்றவர். செக்கிழுத்த செம்மல். நாட்டு முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, இலக்கிய இலக்கண வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். சிறந்த பதிப்பாசிரியர் திருக்குறள் மணக்குடவருரை, தொல் - இளம் பூரணர் மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேம்ஸ் ஆலென் எழுதிய நூல்களுக்குத் தமிழாக்கம் செய்தவர்.


தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை என்பவர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார்.தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதைபறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.கப்பலோட்டிய தமிழன்ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.செக்கிழுத்த செம்மல்தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்திருந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.


"சிரெல்லாம் நிறைந்து விளங்கும் செந்தமிழ் நூல்களிற் சிறந்தது, "திருக்குறள்" என்று வழங்கும் வள்ளுவர் நூல்."தருமர், மணக்குடவர், .தாமத்தர். நச்சர், பரிமேலழகர், பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்கெல்லைஉரை யெழுதினோர். " அப்பதின்மர் உரைகளில் தற்காலம் தமிழ் நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சில வருடங்களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. அதுமுதல் தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். அம்முயற்சியின் பயனாக எனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதி ஒன்று.- "கப்பலோட்டிய தமிழ" னின் (மணக்குடவருரை)