நல்ல மரமும் நச்சு மரமும்

ஒரு நாள் ஓர் அரசிளங் குமரன் தன் தோழனைத் துணைக்கொண்டு கானகத்தில் வேட்டையாடச் சென்றான். அங்கு,அவன் விரும்பியவாறு வேட்டையாட வேங்கையும் வேழமும் அகப்படாமையால் எங்கும் அலைந்து திரிந்து அலக்கணுற்றான். பசியால் மெலிந்து, வெயிலால் உலர்ந்து, இருவரும் தளர்ந்து சோர்ந்தார்கள்; அப்போது, நெடுந்தூரத்தில் ஒரு சிற்றூர் தோன்றக் கண்டு, அவ்வூரை நோக்கி மெல்ல நடந்து செல்வாராயினர். கதிரவன் வெம்மையால் அரசிளங் குமரன் தலைநோயுற்றுத் தன் தோழனது தோளைப் பற்றிக்கொண்டு வழி நடந்தான். அவ்வூரின் அருகே வந்தபோது, இருவரும் மெய் சோர்ந்து, நாவறண்டு, அடிவைத்து நடப்பதற்கும் வலியற்றவராயினர். அந்நிலையில், இருவரையும் இன்முகங்கொண்டு எதிர் சென்று அழைப்பதுபோல் இளந்தென்றல் எழுந்து வந்தது. அம்மெல்லிய பூங்காற்றின் இனிமையால் புத்துயிர் பெற்ற நண்பர்கள், அகமும் முகமும் மலர்ந்து தென்றல் எழுந்து வந்த திசை நோக்கிச் சென்றார்கள். அவ்வழியில், இளந்திரைகளோடு இலங்கிய நன்னீர்ப் பொய்கையொன்று அமைந்திருந்தது. அப்பொய்கையில் விளங்கிய செந்தாமரையில் அன்னங்கள் அமர்ந்து துயின்ற அழகு கண்ணைக் கவர்ந்தது. நற்றாமரைக்கயத்தில் துணைவனை நோக்கி,

"தோயும் திரைகள் அலைப்பத்
தோடார் கமலப் பள்ளி

மேய வகையில் துஞ்சம்
வெள்ளை யன்னம் காணாய்"

என்று தான் பெற்ற இன்பத்தை இனிது எடுத்துரைத்தான். அப்பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அருகே அழைப்பனபோல் அசைந்தன. அவ்வாவியின் தன்மையும் செம்மையும் கண்ட இருவரும், தாய் முகம் கண்ட சேய் போல் மனம் களித்து அந்நன்னீரைப் பருகி மகிழ்ந்தார்கள். அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன. தாகம் தணிந்து, மனமும் மெய்யும் குளிந்த பின்னர், இருவரும் அக்குளத்தின் ஈரக்கரையில் இனிதமரந்து,அங்க்கு வீசிய இளங்ககாற்றை நுகர்ந்து இன்புற்றார்கள்;அப்போது அவ்வாவியின் அருகே கொத்துக் கொத்தாகப் பொன்நிறக் கனிகளைத் தாங்கி, குளிர் நிழல் விரித்து நின்ற மரமொன்றைக் கண்டார்கள். அதன் நிழலிலே தங்கி இளைப்பாற எண்ணி, இருவரும் அங்குச் சென்றார்கள்.

கதிரவன் வெம்மையைத் தடுப்பதற்கு ஓங்கிய பாசிலைப் பந்தர் வேய்ந்தாற் போன்று விளங்கிய மரத்தின் நிழலில் இருவரும் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்கள். சில நாழிகை சென்ற பின்னர், தோழன் துயிலொழிந்து எழுந்தான்; எங்கும் பசுமை நிறமும், பறவையின் ஒலியும், பழத்தின் மணமும் நிறைந்திருப்பினும், பசியின் கொடுமையைப் பொறுக்கலாற்றாது வருந்தினான். கற்பகத் தருவெனக் கவின்பெற விளங்கிய மரக் கொம்புகளை நயந்து நோக்கினான்; அவற்றில் பொன்னிறமான பழங்கள் கொத்துக் கொத்தாய் எம்மருங்கும் இலங்கக் கண்டான்; அப்பொழுது அம்மரக் கிளைகளின் வழியாக மேலே சென்று, இருவரது அரும் பசியையும் தீர்ப்பதற்குப் போதிய கனிகளைக் கொய்து வந்து, துணைவனைத் துயிலினின்றும் எழுப்பினான்.கனிகளின் நிறத்தைக் கண்டும் நன் மணத்தை நுகர்ந்தும், தீஞ்சுவையைத் துய்த்தும் இருவரும் இன்புற்றார்கள். பின்னும் சிறிதுபொழுது அம்மரதின் நிழலில் அமர்ந்திருக்கையில், அரசகுமாரனது தலை நோய் மிகுந்தது. அதனைத் தீர்க்கும் வகையறியாது தோழன் திகைத்து, 'எவரேனும் இவ்வழி வாராரோ' என்று எதிர் நோக்கி இருந்தான்.

இவ்வாறு இருக்கையில் அவ்விடத்தை நோக்கி ஒரு முதியவன் வந்து சேர்ந்தான். "தலைக் குத்துத் தீர்க்கும் மருந்து தங்களிடம் உண்டோ" என்று தோழன் அவனை வினவினான். அப்பொழுது முதியோன் புன்னகை பூத்து, "கையில் வெண்ணையிருக்க நெய் தேடி அலையும் வெள்ளியரும் உண்டென்பதை இன்று நேராக அறிந்தேன்; இம்மரத்தின் பட்டையில் சிறிது செதுக்கி, அதன் சாறைத் தலையிற் பிழிந்தால் எவ்வகைத் தலைக்குத்தும் தீ ர்ந்து விடுமே" என்று சொல்லி அப்பாற் சென்றான். அதை அறிந்த தோழன் அளவிலா மகிழ்வடைந்து, அம்மரப்பட்டையின் சாற்றை மன்னன் மைந்தனது தலையிற் பிழிந்தான்; சிறிது நேரத்தில் அரசிளங் குமரனது தலைக்குத்து அறவே ஒழிந்தது.

அந்நிலையில், தோழன் தலைநோய் தீர்ந்த இளவரசனை நோக்கி "ஐயனே! நாம் இருவரும் கானகம் சென்றது முதல் இதுவரையும் நிகழ்ந்த செயல்களைப் பார்த்தாயா?நாம் பசியாலும் வெயிலாலும் நலிந்து, மெய் தளர்ந்து, வருந்தும் நிலையில் இப்பொய்கை நம்மை அன்புடன் அழைத்து இன்முகம் காட்டித் தாகம் தணித்துத் தளர்வை மாற்றியது. அப்பால்,இம்மரம் நாம் தங்கியிருக்கக் குளிர்நிழல் தந்து, பசியாறப் பழங்கள் அளித்துத் தலைநோய் தீர்க்கவும் தனி மருந்தாய் அமைந்தது. இத்தன்மையை நோக்குங்க்கால், நல்லார் கைப்பட்ட செல்வத்தின் தன்மை நங்கு விளங்குமன்றோ? வறுமையால் வருந்தி வந்தவரை இனிய முகத்துடன் ஏற்று, அவரது குறையை நிறை செய்வதே அறிவுடைய செல்வர் செயலாகும். ஆற்று வழியாகவும் ஊற்று வழியாகவும் நன்னீரைத் தன்அகத்தே நிரப்பிக்கொள்ளும் இப்பொய்கைபோல், அறிவுடையார், நல்வழிகளால் ஈட்டிய பெரும் பொருள் நிறைந்த பண்ணைகளாய் விளங்குவார்கள். நீர் நிறைந்த பொய்கை எப்பொழுதும் தண்மை வாய்ந்து விளங்குதல்போல, அறிவுடைய செல்வரும் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குவார்கள்.தாகத்தால் வருந்தி வருவோர்க்குத் தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல். கல்வியும் செல்வமும் பூத்த மேலோர் வறிஞர்க்கு வரையாது. பொருள் வழங்கும் வள்ளல்களாய் விளங்குவார்கள். இன்னும், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழும் பெரியார்பால் அமைந்த செல்வம். ஊருணியின் நீர்போல ஊரார்க்கே முழுவதும் பயன்படுவதாகும். இதனாலேயே,

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"

என்று திருவள்ளுவர் அருளிப்போந்தார். இன்னும் பழுதறு பழங்களைத் தாங்கி நிற்கும் இப்பயம்மரம் தன் இனிய பழங்களால் பசிநோய் அகற்றி, குளிர் நிழலால் களைப்பை மாற்றி, பட்டையால் பிணியைப் போக்கி, பல வகையாகப் பயன்படுதல்போல, அறிஞரிடம் அமைந்த செல்வம் வறியார்க்குப் பலவகையிற் பயன்படுதலாலேயே,

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"

என்னும் நாயனார் பொருளுரை எழுந்தது. ஆகவே, "தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன்மரம் போலவும் வாழ்வதே பண்புடைமையாகும்" என்று இனிதாக எடுத்துரைத்தான். அரசிளங் குமரனும் அதன் உண்மையை அறிந்து தோழன் கூறிய பொருளுரையைப் பொன்போற் போற்றினான்.

அப்பால், இருவரும் தமது ஊரை நோக்கிச் சென்றனர்; செல்லும் வழியில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. அதன் நடுவே போகும்போது இருவரும் முன் கண்டறியாத ஒரு மரத்தினைக் கண்டு வியந்து நின்றார்கள். அம்மரம் சுவையாகிக் கொம்பாகிக் காட்டு மரம்போல் ஓங்கி வளர்ந்திருந்தது. தன் கொம்புகளிலும் கிளைகளிலும் கூரிய முள் நிறைந்திருந்தது.இலைகளும், தழைகளும் இல்லாமல் பட்ட மரம்போல் நின்ற அதன் கிளைகளில் செவ்வையாய்ப் பழுத்த பழங்கள் கொத்துக் கொத்தாய் அமைந்து கண்களைக் கவர்ந்தன. அம்மரத்தைக் கண்டு இருவரும் வியந்து நிற்கையில் அவ்வழியாக ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான்.
அவன், மரத்தருகே நின்ற இருவரையும் இனிது நோக்கி, "ஐயா! நீங்கள் இருவரும் அயலூரார் என்பதை அறிந்தேன். ஏனெனில், இவ்வூரார் எவரும் இப்பாழான பழுமரத்தைக் கண்ணெடுத்தும் பாரார்கள். இம்மரத்தில் எந்நாளும் இலைகளும், தழைகளும் இல்லாமையால் விலங்குகளும் இதனடியில் நில்லாமல் விலகிப் போகும்; கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்த இக்கனிகளும் நச்சுக் கனிகளாய் இருத்தலின் , உண்டாரைக் கொன்றுவிடும். இம்மரத்தின் கொம்புகளை விறகாய் வெட்டி எரிப்பதற்கும் இதனிடம் அமைந்த முள் இடையூறாயிருக்கின்றது. இப்பாழ் மரம் கடுங்காற்றில் அகப்பட்டு முரிந்துவேரற்று விழவேண்டுமென்று இவ்வூரார் இறைவனை நாளும் வழிபடுகின்றனர். இம்மரம் என்று விழுமோ, அன்றே இவ்வூரார்க்கு நன்றாகும்" என்று அதன் தன்மையை விரிவாகக் கூறி முடித்தான்.
அதைக் கேட்ட அரசிளங்குமரன் முன்னே தங்கி இளைப்பாறிய மரத்தின் நலத்தையும் , பின்னே கண்ட மரத்தின் கொடுமையையும் ஒப்புநோக்கி, நச்சு மரத்தில் அமைந்த நன்னிரக் கனிகள், பேதையர் கைப்பட்ட செல்வம் போல் பிறர்க்கு இடர் விளைப்பனவாகும் என்று எண்ணி வருந்தினான்.

"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"

என்னும் பொய்யாமொழியின் பொருளைத்தெளிந்தான்.
இத்தகைய செல்வம் நிறைந்த பேதையர் நிலத்துக்கு சுமையாகவும் , உலகத்திற்கு உற்ற வசையாகவும் அமைந்திருத்தலால், அன்னார் அழிந்து ஒழிவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். அறிவுடைய செல்வரை உலகம் போற்றும்; அறிவற்ற செல்வரை உலகம் தூற்றும். அறிவுடைய செல்வனது ஆக்கம் கண்டு உலகம் களிக்கும்; அறிவிலா செல்வனது அழிவைக் கண்டு உலகம் மகிழும். அறிவுடைய செல்வன் தன் பொருளைத் தக்கவாறு பயன்படுத்தி, இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் எய்துவான். அறிவிலா செல்வன் பயன்பட வாழும் பண்பறியாப் பேதையனாய் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமும் எய்துவான்.

"நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு"

என்பது என்றும் பொய்யாமொழியேயாகும்.

தெய்வப்புலவர் - திருவள்ளுவர்



திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி.


திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.


திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.


இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.


தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது தவிர சென்னையில் வள்ளுவர் கோட்டம் ஒன்றும் அமைத்துள்ளது.

தமிழ்ப் புலவி - ஔவையார்


தமிழ்ப் புலவி ஔவையார் எல்லாத் தமிழருக்கும் நன்கு அறிமுகமான ஒரு புலவராவர்.


தமிழ் தாயை திருத்தொண்டினால் போற்றியவர்கள் நாலு வகைப்படுவர். முதலில் பிறைசூடிக்கடவுளும் அவர் திருமகனாகிய முருகனும் தெய்வ வகையினராவர். தேவ வகையை சேர்ந்த இந்திரன் இரண்டாம் வகையினன். மூன்றாவதாக அகத்தியன், இவர் முனிவ வகையினராவர். நான்காவதாக மானிட வகையினர், இதில் பல்லாயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் அடங்குவர். பிற இனங்களும் நாகரியங்களும் பண்டைய காலத்தில் பெண்களுக்கு அறிவு கூடாதென்று, பெண்களை அடக்கிய காலத்தில், தமிழரிடையே ஔவையார், வெள்ளி வீதியார், பூதபாண்டியன் தேவியார், ஆதிமந்தியார் போன்ற பல பெண் தமிழ்ப் புலவிகள் கடைச் சங்க காலத்தில் நிலவினர் என்பது தமிழர்களின் உயர்ந்த பண்பாடுக்கு ஒரு உதாரணமாகும். இவர்களுக்குள் ஔவையார் தலைசிறந்தவராவார்.


இவர் தமிழறிவுடன் பிறந்தவர் என்பர். பெற்றாருண்டி மறந்தவர். பாணரகத்தில் வளர்ந்தவர்.சிவபரத்துவந் தெளிந்தவர். வரகவித்துவம் அமைந்தவர். இலௌகிகம், வைதிகம் இரண்டுந் தெரிந்தவர். உள்ளம், உண்மை, மொழி எனும் மூன்றும் சிறந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் அறிந்தவர். தமிழ்நாடெங்குந் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் பலநாள் இருந்தவர்.


பலர்மீதுங் கவிபாடிப் பரிசு பெற்றவர். பரிசு கொடுத்தவர் சிறியராயினும், வறியராயினும் அவரைப் பெரியராக மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பராமுகஞ் செய்தாரையும், பாடலருமை அறிய மூடரையும் வெறுத்துப் பாடியவர்.

டாக்டர் மு. வரதராசன் (1912 - 1974)


மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன், 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் வேலம் என்னும் சிறிய கிராமத்தில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழின் மீதிருந்த பற்றால் 1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக திருப்பனந்தாள் மடம் ரூ.1000 பரிசளித்தது.1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார்.

இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் நூல்கள், நாடகங்கள், , கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை என 85 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார். பெர்னாட்ஷா, திரு.வி.க., காந்தியடிகள், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக வடித்துள்ளார்.இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.1944ம் ஆண்டு மு.வ. எழுதிய "செந்தாமரை" நாவலை வெளியிட யாரும் முன்வராததால், அந்நாவலை அவரே வெளியிட்டார். மு.வ. எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன.

டாக்டர் மு.வரதராஜன் அக்டோபர் 10, 1974ல் தனது 62வது அகவையில் சென்னையில் இயற்கை எய்தினார்.

ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961)


ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர். இவர் தமிழில் சொற்பொழிவு அற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் 1896 ஆம் ஆண்டு பிறந்தார். பி.ஏ, பி.எல் பட்டங்களைப் பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் திருவள்ளுவர் நூல்நயம், தமிழகம் ஊரும்பேரும், தமிழின்பம் என்பன உள்ளிட்ட பதினேழு உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சிறந்த செந்தமிழ் நடைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது. 1961 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.

"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்." (-ரா. பி. சேதுப்பிள்ளை)

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1891 - 1964)



பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்."எங்கெங்கு காணினும் சக்தியடா! - தம்பிஏழுகடல் அவன் வண்ணமடா.."என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்த பொழுது, பாரதியாரின் "தராசு", "எழுக புலவன்" என்று ஆசிர்வதித்தது. அன்று முதல் பாரதிதாசன் ஆகிவிட்ட ஸ்ரீ கனகசுப்புரத்தினம், பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார்.புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றியவர். புரட்சிக் கனல் தெறிக்கும் இவர் பாடல்கள், தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு முதலான பல கவிதை நூல்களை இவர் படைத்துள்ளார்.

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது.கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

வலியோர் சிலர் எளியோர்தமைவதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்நிலையாமெனும் நினைவா?
உலகாளஉ னது தாய்மிகஉயிர்வாதை யடைகிறாள்!
உதவாதினி ஒரு தாமதம்உடனேவிழி தமிழா! (-பாரதிதாசன்)