வேற்றுமைகள்

    பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன வேற்றுமை எனப்படும். தமிழில் எட்டு வேற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுள் முதல் நான்கு வேற்றுமைகள் பற்றி இங்கே காண்போம்.
1.1 எழுவாய் வேற்றுமை
    எழுவாய் வேற்றுமை என்ற பெயர் முதல் வேற்றுமையைக் குறிக்கும். தொல்காப்பியர் இதனைப் 'பெயர் வேற்றுமை' என்றும் குறிப்பிடுகின்றார்.
    அவை தாம்    பெயர் ஐ ஒடு கு    இன் அது கண் விளி யென்னும் ஈற்ற             (தொல்.சொல். 64)
மற்ற வேற்றுமைகளுக்குத் தனி வேற்றுமை உருபுகள் இருப்பதனால் அவற்றை ஐ, ஒடு என்று குறிப்பிடுகின்றார். இவ்வேற்றுமைக்கு என்று தனி ஒரு வேற்றுமை உருபு இல்லாத காரணத்தால் இதனை முதல் வேற்றுமை என்று கூறலாம். எந்த வேற்றுமை உருபினையும் வினையினையும் இது ஏற்காது. பிற சொல்லோடு சேராது, தனித்து நிற்கும், ஒரு சொற்றொடரில் பயனிலைக்கு (வினைச்சொல்லுக்கு) எழுவாயாக - முதலாக (அந்த வினையில் செயல்பாட்டுக்குக் காரணமாக) அமைவதனாலேயே இது எழுவாய் வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
    அவற்றுள்    எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே             (தொல்.சொல். 65)
    பிற்காலத்தில் - வேற்றுமைகளை வேற்றுமை உருபால் பெயரிட்டு அழைத்த காலத்தில் - உருபின்றி, பெயர் மட்டும் தனித்து நின்ற இவ்வேற்றுமையைப் ‘பெயர் வேற்றுமை' என்று அழைக்கத் தொடங்கினர். பின் வந்தோரும் அவ்வழக்கைத் தொடர்ந்தனர். இவ்வேற்றுமை, 'எழுவாய் வேற்றுமை' என்றும், 'முதல் வேற்றுமை' என்றும், 'ஒன்றாம் வேற்றுமை' என்றும் 'பெயர் வேற்றுமை' என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வேற்றுமை
எவ்விதமான உருபும் ஏற்காது. ஒரு சொற்றொடரில் உள்ள எழுவாய் திரிபு ஏதும் இல்லாது, பொருள் உணர்த்தும். இந்த எழுவாய் வேற்றுமை எந்த ஒரு வேற்றுமை உருபினையும் ஏற்காமல் இருந்தாலும் மொழியியலின்படி உருபனியியலில் (Morphology) மட்டும் இல்லாமல் தொடரியல் (Syntax) மற்றும் பொருண்மையியல் (Semantics) ஆகியவற்றில் வேற்றுமைப் பொருளை உணர்த்துகிறது. முதல் வேற்றுமை சங்ககாலம், இடைக்காலம், தற்காலம் ஆகிய முக்காலங்களிலும் எவ்விதமான வேற்றுமை உருபும் ஏற்காமல் நின்று பொருள் உணர்த்தி வருகின்றது.
·  சங்ககாலம்
சான்று:
    மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்             (புறநானூறு . 191)
    மக்களும் - எழுவாய்; நிரம்பினர் - பயனிலை
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே             (குறுந்தொகை . 40)
    நெஞ்சம் - எழுவாய்; கலந்தன - பயனிலை
·  இடைக்காலம்
    ஆ, அவன், மக்கள், சாத்தன் போன்ற பெயர்கள் பயனிலை ஏற்று, எழுவாய்ப்பொருள் உணர்த்தின. நன்னூல் போன்ற இடைக்கால இலக்கணங்கள் அவற்றின் நூற்பாவில் சுட்டிக் காட்டியுள்ளன.
சான்று:
    எழுவாய் உருபு திரிபில் பெயரே     (நன்னூல்.295)
    ஆடலன், ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே             (தேவாரம் 1.105:1)
    ஆதிரையன் - எழுவாய்; அமர்ந்தான் - பயனிலை
·  தற்காலம்
சான்று:
    கண்ணன் கதவைத் திறந்தான்
    கண்ணன் - எழுவாய்; திறந்தான் - பயனிலை
1.2 இரண்டாம் வேற்றுமை
    இரண்டாம் வேற்றுமை 'ஐ' என்ற வேற்றுமை உருபேற்று வரும்.
     இரண்டா குவதே     ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி     எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு     அவ்விரு முதலின் தோன்றும் அதுவே             (தொல்.சொல். 71)
இவ்வேற்றுமையைச் 'செயப்படுபொருள் வேற்றுமை' என்றும் 'ஐ' வேற்றுமை என்றும் அழைப்பர். அன்று முதல் இன்று வரை 'ஐ' என்னும் வேற்றுமை உருபே இரண்டாம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
·  சங்ககாலம்
சான்று:
    ................. ஒளிரும் தாழ்இருங் கூந்தல்    பிறரும் ஒருத்தியை நம்மனைத் தந்து              (அகநானூறு 46 : 9)
·  இடைக்காலம்
    இடைக்காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி இது வருதலைக் காணலாம்.
சான்று:
    செயிர்தரும் கொற்ற மன்னர்    சேனையை மானும் அன்றே                   (கம்ப. பால. ஆற்றுப்படலம்.25)
    அந்தியம் போதில் அரியுரு ஆகி    அரியை அழித்தவனை               (நாலாயிரம். திருப்பல்லாண்டு. 5.3)
·  தற்காலம்
சான்று:
    கண்ணனைப் பார்த்தான்
    அன்று முதல் இன்று வரை பெரும்பாலும் பொருள் மயங்கி வராத சூழலில் இவ்வேற்றுமை உருபு 'ஐ' யினைப் பயன்படுத்துவது இல்லை.
சான்று:
    மரம் வெட்டினான்    கண்ணன் நாற்காலி செய்தான்
ஏனென்றால் இவ்வாறு எழுதுவது உயர்ந்த நடையென்று எண்ணி, அவ்விரண்டாம் வேற்றுமை உருபினைப் பயன்படுத்தாமல்
இருப்பதும் உண்டு.
1.3 மூன்றாம் வேற்றுமை
    மூன்றாம் வேற்றுமை உருபு 'ஒடு' ஆகும்.
     மூன்றா குவதே     ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி     வினை முதல் கருவி அனைமுதற் றதுவே                              (தொல்.சொல். 73)
இவ்வேற்றுமையை     'ஆயுத     வேற்றுமை'     என்பர். இவ்வேற்றுமைக்கான வேற்றுமை உருபு 'ஒடு' என்பதாகும். இவற்றோடு     'ஆன்'     என்பதனையும்     தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளமை தெரியவருகிறது. ஆனால் எவ்வேற்றுமைக்கு இதனைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சான்று:
     சொல்லிய முறையான் சொல்லவும் படுமே             (தொல்.பொருள். 5)
இருப்பினும் இவ் 'ஆன்' மூன்றாம் வேற்றுமைக்குப் பயன்பட்டது தெரியவருகிறது. நாளடைவில் 'ஆன்' என்னும் வேற்றுமை உருபு கருவி வேற்றுமைப் பொருளைப் பெறத் தொடங்கியது.
    'வாளான் வெட்டினான்'
    ஒருசொல் எவ்வாறு எந்த நிலையில் நடந்தது என்பதைக் குறிக்க அது மாறியது எனலாம். மேலே கூறப்பட்ட சான்றினை நாம் ஆங்கிலத்தில் 'with' (Instrumental case marker preposition) என்பது கருவிப்பொருளும் (துணை செய்தல்) உடனிகழ்ச்சிப் பொருளையும் (கூடவே இடம்பெறுதல்) பெற்றுள்ளமையை ஒப்பு நோக்கலாம்.
    'He came with me'    'He came with a sword'    'He cut it with his sword'
·  சங்ககாலம்
சான்று:
    'ஒடு'
     கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு     பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே             (குறுந்தொகை: 3:3-4)
    'ஆன்'
     அறியாமையான் மறந்து, துப்பு எதிர்ந்தநின்     பகைவர் நாடும் கண்டு வந்திசினே             (பதிற்றுப்பத்து : 15:14-15)
அக்காலத்தில் 'ஒடு' என்னும் வேற்றுமை உருபுக்கு 'ஓடு' என்னும் மாற்றுருபு பயன்பாட்டில் இருந்தது.
சான்று:
    வோடு அல்லது யகரம் முதலாது             (தொல்.எழுத்து. 65)
என்கிறார். ஆக 'ஆன்', 'ஒடு', 'ஓடு' போன்ற வேற்றுமை உருபுகள் தமக்குள் வேற்றுமையின்றி மாறி மாறி வந்தது தெரிய வருகிறது.
·  இடைக்காலம்
    'ஆன்' என்ற வேற்றுமை உருபு 'ஆல்' ஆக மாற்று வடிவமுற்று வழங்கலானது. இம்மாற்றம் சங்க மருவிய காலம் என்று சொல்லக்கூடிய இடைக்காலத்திற்கும் சற்று முன்பாக மாறலானது.
சான்று:
    வெல்லல் ஆம் இராமனால்; பிறரும் வெல்வரோ?                  (கம்ப, 5949)
ஆக மொத்தம் நான்கு வடிவங்கள் வழக்கில் இருந்தன (ஆல், ஆன், ஒடு, ஓடு). இக்காலகட்டத்தில் இம் மூன்றாம் வேற்றுமை உருபு 'ஆன்', 'ஓடு' இவ்விரண்டு உருபுக்குள்ளே ஆழமான ஒரு பிரிவு ஏற்பட்டது. அதாவது 'ஆன்' கருவியையும் 'ஓடு' உடனிகழ்ச்சியையும் குறிக்க வந்தன.
    மூன்றாவதன் உருபு ஆல், ஆன், ஓடு, ஒடு     கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்                (நன்னூல் - 297)
·  கருவிப்பொருள்
    வாளால் வெட்டினான் (நன்னூல் உரை - 297)
·  உடனிகழ்ச்சி
    இடைக்காலத்தில் 'ஆல்', 'ஆன்' வேற்றுமை உருபுகள் வரும் இடங்களில் 'கொண்டு' என்பதும், 'ஒடு', 'ஓடு' வேற்றுமை உருபுகள் வரும் இடங்களில் 'உடன்' என்பதும் சொல்லுருபுகளாக வந்து நின்றன. ’சொல்லுருபு' (Postposition) என்பது வேற்றுமை உருபைப்போல் செயல்பட்டு வரும்.
சான்று:
    வாள் கொண்டு வெட்டினான் (நன்னூல் உரை.297)    தந்தையுடன் மைந்தன் வந்தான் (நன்னூல் உரை.297)
·  தற்காலம்
    தற்காலத்தில் இம் மூன்றாம் வேற்றுமையை மொழியியலார் இரண்டாகப் பிரித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்.
    1. கருவி வேற்றுமை (Instrumental Case)    2. உடனிகழ்ச்சி வேற்றுமை (Associative Case)
என்கிறார்கள்.
·  கருவிவேற்றுமை (Instrumental Case)
சான்று:
    'ஆல்'
    'கண்ணன் கத்தியால் பழத்தை வெட்டினான்'
இச்சொற்றொடர் சாதாரணமாகத் தமிழில் பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டு. இச்சொற்றொடரைத் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள்,
    'கண்ணன் கத்திகொண்டு பழத்தை வெட்டினான்'
என்கின்றனர். இச்சான்றினை நோக்கும்போது இடைக்காலத்தில் சொல்லுருபாக வந்த 'கொண்டு' தமிழகத்தின் ஒரு பகுதியில் வேற்றுமை உருபாகப் பயன்பட்டு வருவது தெரியவருகிறது. இதனை வட்டாரவழக்கு (regional dialect) என்பர்.
·  உடனிகழ்ச்சி வேற்றுமை (Associative Case)
சான்று:
    'ஒடு'
    'கண்ணன் அவனோடு போனான்' இவ்வேற்றுமையின் மற்றொரு உருபு 'உடன்' என்பதாகும். இவ் 'உடன்' என்னும் வேற்றுமை உருபு எழுத்துத்தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பேச்சுத்தமிழில் 'ஓடு' என்பதையே பயன்படுத்து கின்றனர்.
    இவ்வாறாக இம் மூன்றாம் வேற்றுமை ஒரே வேற்றுமை உருபு கொண்ட ஒரு வேற்றுமையாகச் சங்க காலத்திலும் பல வேற்றுமை உருபுகளைக் கொண்ட ஒரு வேற்றுமையாக இடைக் காலத்திலும் விளங்கியது. தற்காலத்தில் இரண்டு வேற்றுமைகளாகப் பிரித்து மொழியியலார் கையாளுவதும் தெரிய வருகிறது.
1.4 நான்காம் வேற்றுமை
    இவ்வேற்றுமைக்கான உருபு 'கு' ஆகும்.
    நான்கா குவதே    குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி    எப்பொரு ளாயினுங் கொள்ளும் அதுவே             (தொல்.சொல். 75)
    இவ்வேற்றுமைையைக் 'கொடை வேற்றுமை' என்பர். இதனை ஆங்கிலத்தில் 'Dative Case' என்பர். Dative எனும் ஆங்கிலச் சொல் 'Dativus' எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. இது 'கொடுத்தல்' எனும் பொருள் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
·  சங்ககாலம்
சான்று:
    வரிமணல் புனைஇய பாவைக்குக்    குவவுச் சினைப் பூக்கொய்து     (புறநானூறு - 1)
·  இடைக்காலம்
    இடைக்காலத்தில் 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபோடு 'பொருட்டு' என்ற இன்னும் ஒரு உருபு வழங்கலானது.
சான்று:
    கூழின் பொருட்டு (நன்னூல் உரை.298)
·  தற்காலம்
    தற்காலத்தில் 'கு' என்ற வேற்றுமை உருபே நான்காம் வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மொழியியலின்படி பிரித்துப் பார்க்கும்போது '-க்கு', -உக்கு', '-கு' போன்ற மாற்றுருபுகள் வருகின்றன என்பர் மொழியியலார். மொழியியலின்படி இவ்வுருபினை விளக்குமுகமாக,
    -க்கு என்னும் மாற்றுருபு, பெயர்ச்சொல் திரிந்து (Oblique form) வரும் போது இ, ஈ, ஐ, ஆய் போன்றவை ஈற்றில் வரும்போது பயன்படுத்தப்படுகிறது.
சான்று:
    மரத்துக்கு - மர+த்து+க்கு    தம்பிக்கு - தம்பி+க்கு
    -உக்கு என்னும் மாற்றுருபு எல்லாப் பெயர்ச்சொல்லுக்கும் வருகிறது.
சான்று:
    'குழந்தை பாலுக்கு அழுகிறது' - (பால்+உக்கு)
-கு என்னும் மாற்றுருபு ஒலி நிரவல்களான (Euphonic increment)
இன், அன் போன்றவைகளை அடுத்துவரும்.
சான்று:
    'பாலிற்கு' - பால்+இன்+கு - பால்+இற்+கு
    'அதற்கு' - அது+அன்+கு - அது+அற்+கு
இங்கு வருகிற 'அன்', 'இன்' போன்ற ஒலி நிரவலுக்கு அடுத்ததாகப் பின்னண்ண ஒலி (velar sound) வருவதால் அந்த 'இன்', '-ற்-' ஆக மாறிவிடுகிறது

சொல் இலக்கணம்

ஆ (பசு), வீடு, வண்டு - இங்ஙனம் ஓர் எழுத்துத் தனித்தோ, இரண்டு முதலிய எழுத்துக்கள் தொடர்ந்தோ ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் எனப்படும்.

(1) ஆ, வீடு, வண்டு - இவற்றுள் ஒவ்வொன்றும் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல்லாதலால் பெயர்ச் சொல் எனப்படும்.

(2) கண்டான், கண்டு, கண்ட - இவ்வாறு ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

1. திணை

உலகத்து உயிர்களுள் விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன என்றும் உயிர்களைவிட மனிதன் பேராற்றல் படைத்தவனாக இருக்கின்றான்.

எனவே, மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாகின்றான். இவ்வாறே நம் கண்ணுக்குத் தெரியாத தேவரும் நரகரும் உயர்ந்தவர் என்று நூல்கள் கூறுகின்றன. ஆகவே மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். இப்பிரிப்பு இன்றளவும் இலக்கணத்தில் கூறப்படுகிறது.

மக்கள், தேவர், நரகர் - உயர்திணை.
பிற உயிர் உள்ளனவும் இல்லனவும் - அஃறிணை.

2. பால்

பால் - பிரிவு:

கண்ணன், பாண்டியன், பையன் - ஆண்பால்.
கண்ணகி, அரசி, பெண் - பெண்பால்.
அரசர்கள், மக்கள், பெண்கள் - பலர்பால்.
இம்மூன்று பால்களும் உயர்திணையைச் சேர்ந்தவை.

பசு, கிளி, பாம்பு, தவளை, மலை, மரம் - ஒன்றன் பால்.
பசுக்கள், கிளிகள், பாம்புகள், தவளைகள், மலைகள், மரங்கள் - பலவின்பால்.
இவை இரண்டும் அஃறிணைக்கு உரிவை.

3. எண்

எண் - பொருள்களின் எண்ணிக்கை.
ஒன்றைக் குறிப்பது ஒருமை: ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.

கந்தன், கற்பகம், மாடு - ஒருமை எண்.
பெண்கள், பிள்ளைகள், மாடுகள் - பன்மை எண்.
நான், நீ, அவன், அவள், அது - ஒருமை எண்.
நாம், நீர், அவர்கள், அவை - பன்மை எண்.

4. இடம்

நான் நேற்று ஆசிரியரைப் பற்றிச் சொன்னபோது நீ மகிழ்ச்சி அடைந்தாய் - இந்த வாக்கியத்தில்,

நான் என்பது பேசுவோனைக் குறிக்கின்றது.
நீ என்பது முன்னின்று கேட்பவனைக் குறிக்கின்றது.
ஆசிரியரை என்பது பேசப்படுபவரைக் குறிக்கின்றது.
இம்மூவர் இடங்களும் முறையே (1) தன்மை இடம் (2) முன்னிலை இடம் (3)
படர்க்கை இடம் என்று பெயர் பெறும்.
(1) நான் - தன்மையிடம்.
(2) நீ - முன்னிலையிடம்.
(3) ஆசிரியர் - படர்க்கையிடம்.

நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.
அவன், அவள், அது - படர்க்கை ஒருமை.
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.
நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.
தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.

நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.
தான் சொன்னதைக் கேட்டீர்களா?
தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர்
என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும்.

5. வேற்றுமை

கண்ணன் - இஃது ஒரு பெயர்ச்சொல். இச்சொல் கண்ணனை (ஐ), கண்ணனால் (ஆல்), கண்ணனுக்கு (கு), கண்ணனில் (இல்), கண்ணனது (அது), கண்ணனிடம் (இடம்), கண்ணா! வருக - எனப் பலவாறு பொருளில் வேறுபட்டு வருதலைக் காணலாம். இவ்வேறுபாடு வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமைகளை உண்டாக்கும் ஐ முதலிய உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.

வேற்றுமை எட்டு வகைப்படும்.

கண்ணன் வந்தான் - இயல்பான பெயர்; முதல் வேற்றுமை.

கண்ணனைக் கண்டேன் - இரண்டாம் வேற்றுமை (ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு.

கண்ணனால் அழைக்கப்பட்டேன் - ஆல்
கண்ணனோடு சென்றேன் - ஓடு
கண்ணனுடன் வந்தேன் - உடன்
மூன்றாம் வேற்றுமை.
ஆல், ஓடு, உடன் - மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

கண்ணனுக்குத் திருமணம் - நான்காம் வேற்றுமை.
கு - நான்காம் வேற்றுமை உருபு.

கண்ணனில் கந்தன் பெரியவன் - இல்
கண்ணன் வீட்டினின்று சென்றான் - நின்று
கண்ணன் மரத்திலிருந்து இறங்கினான் - இருந்து
ஐந்தாம் வேற்றுமை உருபு.
இல், நின்று, இருந்து - ஐந்தாம் வேற்றுமை உருபுகள்.

இது கண்ணனது பை - அது
இவை கண்ணனுடைய பைகள் - உடைய - ஆறாம் வேற்றுமை.
அது, உடைய - ஆறாம் வேற்றுமை உருபுகள்.

பையில் பணம் இருக்கிறது - இல்
கண்ணனிடம் கத்தி இருக்கிறது - இடம்
வீட்டின் கண் விருந்தினர் இருக்கின்றனர் - கண்
இல், இடம், கண் - ஏழாம் வேற்றுமை உருபுகள்.

பெயர் கூறி ஒருவனை அழைத்தலே எட்டாம் வேற்றுமை எனப்படும். அழைத்தல் - விளித்தல். இது விளி வேற்றுமை என்றும் சொல்லப்படும். முதல் வேற்றுமை விளி வேற்றுமை கண்ணன் கண்ணா! - மகன் மகனே! - ஈற்றில் ஏகாரம் மிக்கது. மக்கள் மக்காள் - ஈற்றயல் நீண்டது. முருகன் முருக! - பிள்ளை பிள்ளாய் ! - ஈற்று `ஐ' - `ஆய்' எனத் திரிந்தது.

6. ஆகு பெயர்

மயில் - ஒரு பறவையின் பெயர்.
மயில் வந்தாள் - மயில் போன்ற (சாயலையுடைய) பெண் வந்தாள். இவ்வாறு ஒன்றன் பெயர் அதனோடு தொட்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவரின், அஃது ஆகுபெயர் எனப்படும்.

அவன் சிறப்பை மதுரை பாராட்டுகிறது. இங்கு `மதுரை' என்னும் இடத்தின் பெயர் அவ்விடத்திலுள்ள மக்களுக்கு ஆகி வந்தது. எனவே, `மதுரை', என்பது ஆகு பெயர். சித்திரை வந்தான் - `சித்திரை' என்னும் மாதத்தின் பெயர் அம்மாதத்தில் பிறந்த ஒருவனுக்குப் பெயராக வந்துள்ளது. எனவே, `சித்திரை' என்பதும் ஆகுபெயர். வீட்டிற்கு வெள்ளையடித்தான் - `வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர் அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. எனவே, `வெள்ளை' என்பதும் ஆகுபெயர்.

ஒரு `படி' வாங்கினேன் - `படி' என்னும் முகத்தலளவைப் பெயர், அந்த அளவுடைய ஒரு பொருளுக்கு ஆகி வந்தது. எனவே, `படி' என்பதும் ஆகுபெயர்.

7.தொழிற் பெயர்

வா, போ, நில், செய் - என்றாற் போல வருபவை வினை செய்ய ஏவப் பயன்படும்
சொற்களாகும். இவை வினைச் சொற்கள் எனப்படும். இவை ஏவல் வினைமுற்றுக்கள்
என்றும் சொல்லப்படும், இவற்றிலிருந்து,
வந்தான், வருகிறான், வருகிறாள், வருவார் எனவும்,
வந்து, போய், நின்று, செய்து எனவும்,
வந்த, போன, நின்ற, செய்த எனவும்,
வருதல், போதல், நிற்றல், செய்தல் எனவும் சொற்கள் பலவாறு வளர்ச்சியடையும்

இவற்றுள் முதல் மூன்று வகைப்பட்டவையும் வினைச்சொற்களாகும். வருதல், போதல், நிற்றல், செய்தல் என்பன வருதலாகிய தொழில், போதலாகிய தொழில், நிற்றலாகிய தொழில், செய்தலாகிய தொழில் எனத் தொழிலுக்குப் பெயராகி வருதலின் தொழிற் பெயர்கள் எனப்படும்.

தொழிற் பெயர் விகுதிகள்:
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, தி, சி, காடு, பாடு, மதி, து, உ, மை
முதலியன.

செய் + தல் - செய்தல். இவற்றுள் `செய்' என்பது இச்சொல் வளர்ச்சிக்கு உயிர் நாடியாய் முன் நிற்பதால் பகுதி எனப்படும்.
`தல்' என்பது சொல்லின் கடைசியில் நிற்பதால் விகுதி, எனப்படும். செய்- பகுதி; தல் தொழிற் பெயர் விகுதி, ஓடுதல், அடல், ஓட்டம், நடத்தை, வருகை, தீர்வை, போக்கு, வாய்ப்பு, மறதி, முயற்சி, சாக்காடு, மெய்ப்பாடு, ஏற்றுமதி, நடந்தது, வரவு, நடந்தமை - இவை தொழிற் பெயர்கள்.

8. வினைமுற்று

படித்தான், படித்து, படித்த, - என்பன வினைச்சொற்கள் என்பது முன்பே கூறப்பட்டதன்றோ? இவற்றில் பொருள் முற்றி (முடிந்து) நிற்கும் வினைச்சொல் எது? படித்தான் என்பதே வினை முற்றி நிற்பது. ஆதலால் படித்தான் என்பது வினைமுற்று எனப்படும். படித்து, படித்த என்பவை முற்றுப் பெறாத வினைச் சொற்கள், இவை (1) படித்து (வந்தான்) என வேறொரு வினைச் சொல்லையும், (2) படித்த (பையன்) என ஒரு பெயர்ச் சொல்லையும் தழுவி நிற்க வேண்டுவனவாக இருக்கின்றன. இவற்றுள் வினையைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் வினையெச்சம் எனப்படும். பெயரைத் தழுவும் முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரெச்சம் எனப்படும்.

படித்தான், படிக்கின்றான், படிப்பான் - வினைமுற்று.
படித்து, நடந்து, படிக்க (வந்தான்) - வினையெச்சம்.
படித்த, படிக்கின்ற, படிக்கும் (பையன்) - பெயரெச்சம்.

9. மூன்று காலங்கள்

கம்பர் இராமாயணம் பாடினார்.
பையன் பாடம் படிக்கிறான்.
குழந்தை பால் குடிக்கும்.
பாடினார், படிக்கிறான், குடிக்கும் - இவற்றுள் ஒவ்வொன்றும் எந்தக் கால
நிகழ்ச்சியை உணர்த்துகின்றது?
பாடினார் என்பது செயல் நடந்துவிட்ட (இறந்த) காலத்தையும்.
படிக்கிறான் என்பது செயல் இப்பொழுது நிகழ்கின்ற காலத்தையும்,
குடிக்கும் என்பது செயல் இனி நடைபெற இருக்கும் எதிர்காலத்தையும்
காட்டுகின்றன அல்லவா? இவை மூன்றும் முறையே,
இறந்த கால வினைமுற்று
நிகழ்கால வினைமுற்று
எதிர்கால வினைமுற்று
எனப்படும்.
பாடினார் - இறந்தகால வினைமுற்று.
படிக்கிறான் - நிகழ்கால வினைமுற்று.
குடிக்கும் - எதிர்கால வினைமுற்று.

செய்தான் - செய் + த் + ஆன்
செய்கிறான் - செய் + கிறு + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இம்மூன்று சொற்களும் வெவ்வேறு காலங்களை உணர்த்துகின்றன என்பதை நீங்களே உணரலாம். இங்ஙனம் தனித்தனிக் காலத்தை உணர்த்தும் உறுப்பு ஒவ்வொரு சொல்லிலும் எங்கே இருக்கிறது? மூன்றிலும் உள்ள `செய்' என்னும் முதல் உறுப்புப் பகுதி என்பதும், கடைசி உறுப்பு விகுதி என்பதும் உங்களுக்குத் தெரியும். பகுதி தொழிலை உணர்த்துகிறது; விகுதி தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்துகிறது; இவை இரண்டும் போக ஒவ்வொன்றிலும் எஞ்சியிருக்கும் உறுப்பே ஒவ்வொரு காலத்தை உணர்த்துகின்றது.

த் - இறந்த (செயல் நடந்த) காலத்தையும்
கிறு - நிகழ் (செயல் நிகழ்கின்ற) காலத்தையும்
வ் - எதிர் (செயல் இனி நடைபெறும்) காலத்தையும் உணர்த்துகின்றன. இவை
இவ்வாறு சொல்லின் இடையில் நிற்பதால் இடைநிலைகள் என்று பெயர் பெறும்; இவை
காலம் காட்டுவதால் காலம் காட்டும் இடைநிலைகள் என்று சொல்லப்படும்.

செய்தான் - செய் + த் + ஆன்
உண்டான் - உண் + ட் + ஆன்
கற்றான் - கல் + ற் + ஆன்
விரும்பினான் - விரும்பு + இன் + ஆன்.
இவை நான்கும் இறந்த காலத்தைக் குறிக்கும் வினைச்சொற்கள். ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன அல்லவா? இவை இறந்த கால இடைநிலைகள். த், ட், ற், இன் - இறந்த கால இடைநிலைகள்.

உண்கிறான் - உண் + கிறு + ஆன்
உண்கின்றான் - உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன்
இவை மூன்றும் நிகழ்காலத்தைக் காட்டுகின்றன ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக
இருக்கின்றன. இவை நிகழ்கால இடைநிலைகள்.
கிறு, கின்று, ஆநின்று - நிகழ்கால இடைநிலைகள்.

உண்பான் + ப் + ஆன்
செய்வான் - செய் + வ் + ஆன்
இவையிரண்டும் எதிர்காலத்தை உணர்த்துகின்றன; ஆயினும் இடைநிலைகள் வெவ்வேறாக இருக்கின்றன இவை எதிர்கால இடைநிலைகள். ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.

வினைமுற்றுக்களின் இடைநிலைகள் இருந்து காலம் காட்டுவது போலவே வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் இவ்விடைநிலைகள் நின்று காலம் காட்டும்.
உண்டு (வந்தேன்) - உண் + ட் + உ.
செய்து - செய் + த் + உ.
கற்று - கல் + ற் + உ.
இவை இறந்தகால இடைநிலைகளைக் கொண்ட வினையெச்சங்கள்; ஆதலால் இவை இறந்தகால வினையெச்சங்கள் எனப்படும்.

படிக்கிற (பையன்) - படி + கிறு + அ
மேய்கின்ற (பசு) - மேய் + கின்று + அ.
இவை நிகழ்கால இடைநிலைகளைக் கொண்ட பெயரெச்சங்கள்; ஆதலால் இவை நிகழ்காலப் பெயரெச்சங்கள் எனப்படும்.

10. வினையாலணையும் பெயர்

1.> மதுரை மாரியப்ப சுவாமி பாடினார் - இவ்வாக்கியத்தில் `பாடினார்' என்பது வினைமுற்று.

இவர் பாடிய மறுநாள் தெரு வழியே சென்றார். இவரைக் கண்ட மக்கள், `நேற்றுப் பாடினவர் இதோ போகிறார்' என்றனர். பாடியவரது இயற்பெயர் மாரியப்ப சுவாமி என்பது. ஆனால் மக்கள் அதைச் சொல்லாமல், `பாடினவர்' என்னும் புதிய பெயரை இட்டு வழங்கினர். இப்பெயர் இவரை இவர் செய்த வினையால் அணைந்த பெயராகும். பாடுதலாகிய வினையைச் செய்ததனால் பாடினவர்குத் தாம் செய்த வினையால் அணையும் பெயர், விணையாலணையும் பெயர் எனப்படும். வினைமுற்று வினையாலணையும் பெயர் ஓடினார் ஓடினவர் பாடுகிறான் பாடுகிறவன் செய்வான் செய்பவன் படித்தான் படித்தவன்இவ்வினையாலணையும் பெயர்கள் செய்பவன், செய்பவனை, செய்பவனால், செய்பவனுக்கு, செய்பவனில், செய்பவனது, செய்பவனிடம், செய்பவனே! என வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும்

2>. தொழிற் பெயர் வினையாலணையும் பெயர்: வேறுபாடுகள். தொழிற் பெயர் வினையாலணையும் பெயர் வருதல் - தொழிற்பெயர் வந்தவன் - வினையாலணையும் பெயர்

1. தொழிலுக்குப் பெயராய் வரும் 1. தொழிலைச் செய்த பொருளுக்கே பெயராய் வரும்.
2. படர்க்கை இடற்திற்கே உரியது. மூவிடத்திற்கும் உரியது.
3. காலம் காட்டாது. 3. முக்காலத்தையும் காட்டும். வந்தானை - இறந்தகாலம்
வருகின்றவனை - நிகழ்காலம் வருவானை - எதிர்காலம். வினையாலணையும் பெயர் முக்காலமும் காட்டும்.

11. ஐம்பாற் பெயர் விகுதிகள்

1. ஆண்பால் பெயர் விகுதி
(1) குழையன் அன்
(2) குழையான் ஆன்
(3) வடமன் மன்
(4) கோமான் மான்
(5) பிறன் ன்

அன், ஆன், மன், மான், ன் - ஆண்பாற் பெயர் விகுதிகள்.
2. பெண்பால் பெயர் விகுதி
(1) குழையள் அள்
(2) குழையாள் ஆள்
(3) பிறள் ள்
(4) அரசி இ

அள், ஆள், ள், இ - பெண்பால் பெயர் விகுதிகள்.
3. பலர்பால் பெயர் விகுதி
(1) குழையர் அர்
(2) குழையார் ஆர்
(3) குருமார் மார்
(4) குருமார்கள் கள்
(5) பிறர் ர்

அர், ஆர், மார், கள், ர் - பலர்பால் பெயர் விகுதிகள்.

4. ஒன்றன் பால் பெயர் விகுதி
அது து
து - ஒன்றன்பால் பெயர் விகுதி
.
5. பலவின்பால் பெயர் விகுதி

(1) நல்லன அ
(2) நல்லவை வை
(3) நாடுகள் கள்

அ, வை, கள் - பலவின்பால் பெயர் விகுதிகள்.

12. ஐம்பால் வினைமுற்றுக்கள்

வினைமுற்று விகுதிகள்
1. ஆண்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தனன் அன்
(2) நடந்தான் ஆன்

2. பெண்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தனள் அள்
(2) நடந்தாள் ஆள்
3. பலர்பால்

வினைமுற்றுக்கள் விகுதி
(1) நடந்தனர் அர்
(2) நடந்தார் ஆர்
(3) செல்லுப ப
(4) பாடன்மார் மார்

4. ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தது து
(2) கூவிற்று று
(3) பொருட்டு (பொருளையுடையது) டு

5. பலவின்பால் வினைமுற்று விகுதி
(1) நடந்தன அ (உடன்பாடு)
(2) நடவா ஆ (எதிர்மறை)

13. பகுபத உறுப்புகள்

செய், நில், உண், எடு - இவற்றுள் ஒவ்வொன்றும் பிரிக்கமுடியாத சொற்கள். எனவே பகாப் பதங்கள் எனப்படும். (பகுத்தல் - பிரித்தல்; பகா - பிரிக்க
முடியாத.)
செய்தான் = செய் + த் + ஆன்
நின்றான் = நில் + ற் + ஆன்
உண்கிறான் = உண் + கிறு + ஆன்
இவ்வாறு பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும்.

பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் உறுப்புகள் இருக்கும்.
கூனன் = கூன் + அன்
கூன் - பகுதி
அன் - விகுதி

செய்தான் = செய் + த் + ஆன்
செய் - பகுதி
த் - இடைநிலை
ஆன் - விகுதி

செய்தனன் = செய் + த் + அன் + அன்
செய் - பகுதி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி

படித்தனன் = படி + த் + த் + அன் + அன்
படி - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி

நடந்தனர் = நட + த் + த் + அன் + அர்
நட - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அர் - விகுதி
(த் - ந் ஆனது - விகாரம்)

பெற்றாள் = பெறு + ஆள்
பெற்று + ஆள்
பெற்று - பகுதிஒற்று
ஆள் - விகுதி

இரட்டித்து இறந்தகாலம் காட்டியது.
இவ்வாறு நட்டான், தொட்டான், விட்டார் என்று சொற்களையும் பிரித்துக்கொள்க.

14. முற்றெச்சம்

உண்டான் - வினைமுற்று
உண்டு (வந்தான்) - வினையெச்சம்
உண்ட (பையன்) - பெயரெச்சம்

இவற்றை நீங்கள் அறிவீர்கள். கீழ்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்: கண்ணன் கண்டனன் வந்தான். இதில் உள்ள ``கண்டனன்'' என்பது வினைமுற்று; ஆனால் இங்கே `கண்டு' என்னும் வினையெச்சப் பொருளில் வந்துள்ளது. `கண்ணன்' கண்டு வந்தான்' என்பது வாக்கியத்தின் பொருள். இவ்வாறு ஒரு வினைமுற்று வினையெச்சப் பொருளில் வருமாயின், அவ்வினைமுற்று அவ்விடத்தில் முற்றெச்சம் (முற்று-எச்சம்) எனப்படும்.

(1) இராமன் குகனைத் தழுவினன் மகிழ்ந்தான்.
(2) வீமன் நகைத்தனன் சீறினான்.
(3) தமயந்தி நளனைத் தேடினள் அலைந்தாள்.
தழுவினன், நகைத்தனன், தேடினள் - முற்றெச்சங்கள்.

எழுத்தின் வகைகள்


எழுத்துகளை முதல் எழுத்து என்றும் சார்பு எழுத்துஎன்றும் இருவகையாகப் பிரிக்கலாம். மொழிக்குமுதற்காரணமாகவும் பிற எழுத்துகள் தோன்றவும் ஒலிக்கவும்காரணமாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள் எனப்படும்.முதல் எழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளைச் சார்புஎழுத்துகள் என்கிறோம்.


3.1.1 முதல் எழுத்துகள்

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய்எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். சொற்களை உருவாக்கஇவையே அடிப்படையாக இருக்கின்றன. எனவே இவற்றை முதல்எழுத்துகள் என்கிறோம்.
• உயிர் எழுத்துகளும் அமைப்பு முறையும் தமிழில், அடிப்படை ஒலிகளான அ முதல் ஒள வரைஉள்ள ஒலிகளை - எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்கிறோம். இவை அமைந்துள்ள முறை கீழேகொடுக்கப்பட்டுள்ளது.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும்ஒலிக்கக் கூடியனவாக உள்ளன.

உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர்.ஆவி என்றால் உயிர் என்று பொருள்.
• மெய் எழுத்துகளும் அமைப்பு முறையும்உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாகஉள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும். மெய்எழுத்துகளும் அவை வரிசையில் அமைந்துள்ள முறையும் கீழேதரப்பட்டுள்ளன.

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

இந்த எழுத்துகளை ஒலிப்பது சற்றுக் கடினம். உயிர் இல்லாமல்உடல் இயங்காது. அதுபோல இந்த எழுத்துகள் உயிர்எழுத்துகளுடன் சேர்ந்தே இயங்கும், அதனால் இவற்றை மெய்எழுத்துகள் என்று கூறுவர். மெய் என்பதும் உடம்பு என்பதும் ஒரே பொருள் தரும் சொற்கள் ஆகும். மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும் கூறுவர். இந்த எழுத்துகள்புள்ளியுடன் இருப்பதால் இவற்றைப் புள்ளி எழுத்து என்றும்கூறுவர்.
உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.

‘உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே’ (59)

என்னும் நன்னூல் நூற்பா இதை விளக்குகிறது.

3.1.2 சார்பு எழுத்துகள்

தமிழ் மொழியில் உயிர்எழுத்துகள் மெய் எழுத்துகள்மட்டும் அல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன.இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாகஅமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) நிற்கின்றன. எனவே சார்பு எழுத்துகள் எனஅழைக்கப் படுகின்றன. உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகள்சார்பு எழுத்துகள் ஆகும்.

• உயிர்மெய்
உயிர் (ஒலியும்) எழுத்துகளும் மெய் (ஒலியும்) எழுத்துகளும்சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் உண்டாகின்றன. உயிர் ஒலியேஎல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதால் அதற்கு முதல் இடம்தந்து, ‘உயிர்மெய்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

மெய் உயிர் உயிர்மெய்(வரி வடிவம்)
க் + இ = கி
ச் + உ = சு
ப் + ஊ = பூ
வ் + ஆ = வா
த் + ஏ = தே


இந்த எழுத்துகள் எல்லாம் உயிர் எழுத்துகளும் மெய்எழுத்துகளும் சேர்ந்து உருவாகிய எழுத்துகள் என்பதால்,இவற்றை உயிர்மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம். மேலே காட்டிய எழுத்துகளை நீங்களும் ஒலித்துப் பாருங்கள்,இந்த எழுத்துகளில் மெய் எழுத்தின் ஓசையும், உயிர் எழுத்தின்ஓசையும் இணைந்து இருப்பதைக் காணலாம்,

• ஆய்தம்
தமிழ் மொழியில் ஃ என்று ஓர் எழுத்து உள்ளது, இதைஆய்த எழுத்து என்று சுட்டுவர்.
இது சொற்களில் பின்வருமாறு வரும்.

அஃது, எஃகு
ஆய்த எழுத்து ஃ என்ற முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் மூன்று புள்ளிகள் இருப்பதால் இதை முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்றும் அழைப்பர். ஆய்த எழுத்து உயிர் எழுத்தோடும் மெய் எழுத்தோடும் ஒன்றாமல் இருப்பதால் இதைத் தனிநிலை என்றும் சுட்டுவர். ஆய்த எழுத்துகள் சொல்லில் வரும்போது, அதற்கு முன்னும் பின்னும் வேறு எழுத்துகள் வருகின்றன. ஆய்த எழுத்தும் மற்றஎழுத்துகளைச் சார்ந்தே வருகிறது. எனவே இதுவும் சார்பு எழுத்து எனப்படுகிறது. தமிழில் வேறு சில சார்பு எழுத்துகளும் உள்ளன. அவை பின் வரும் பாடங்களில் விளக்கப்படும்.

3.1.3 உயிர் எழுத்தின் வகைகள்

உயிர் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை,

1. குறில்
2. நெடில்

• குறில்
பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் குறுகி ஒலிக்கின்றன. அவ்வாறு குறுகி ஒலிக்கும் எழுத்துகளைக் குறில் எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை நோக்குங்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

இவற்றில் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறைந்த அளவுநேரமே ஒலிப்பதால் இவற்றைக் குற்றெழுத்து அல்லது குறில் எழுத்து என்று குறிப்பர்.

‘அ, இ, உ, எ, ஒ, குறில் ஐந்தே’ (64)

என்னும் நன்னூல் நூற்பா, அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் குறில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

• நெடில்
பன்னிரண்டு உயிர் எழுத்துகளில் சில எழுத்துகள் நீண்டு ஒலிக்கின்றன. அவ்வாறு நீண்டு ஒலிக்கும் எழுத்துகளை நெடில்எழுத்துகள் என்று குறிப்பிடுவர்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நீண்டு ஒலிப்பதால் நெட்டெழுத்து அல்லது நெடில் எழுத்துகள் என்று குறிக்கப்படும்.

‘ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள நெடில்’ (65)

என்னும் நன்னூல் நூற்பா ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடில் எழுத்துகள் என்று குறிப்பிட்டுள்ளது.

3.1.4 மெய் எழுத்தின் வகைகள்

உயிர் எழுத்துகளில் இவ்வாறு குறில், நெடில் வேறுபாடுஉண்டு, ஆனால் மெய் எழுத்துகளில் இவ்வாறான குறில், நெடில்வேறுபாடு இல்லை. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉண்டாகும் உயிர்மெய் எழுத்துகளிலும் இதே போல குறில்நெடில் வேறுபாடு உண்டு.

மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். அவை,
1. வல்லினம்
2. மெல்லினம்
3. இடையினம்

• வல்லினம்
மெய் எழுத்துகளில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துகளை வல்லினம் என்று கூறுவர். க், ச், ட், த், ப், ற் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மையாக ஒலிப்பதால் வல்லின எழுத்துகள் ஆகும்.

வல்லினம் க, ச, ட, த, ப, ற என ஆறே (68)

என்னும் நன்னூல் நூற்பா வல்லின எழுத்துகள் எவை என்றுகுறிக்கிறது.

• மெல்லினம்
மெய் எழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளை மெல்லினம் என்று கூறுவர். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறு மெய் எழுத்துகளும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.

மெல்லினம் ங, ஞ, ண, ந. ம, ன என ஆறே (69)

என்னும் நன்னூல் நூற்பா மெல்லின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

• இடையினம்
மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துகளை இடையினம் என்று கூறுவர். ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு மெய் எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்.

இடையினம் ய, ர, ல, வ, ழ, ள என ஆறே (70)

என்னும் நன்னூல் நூற்பா இடையின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

3.1.5 இன எழுத்துகள்

பிறப்பு, ஒலிப்பு முதலியவற்றில் ஒத்து இருக்கும் எழுத்துகளை இன எழுத்துகள் என்று கூறுவர். உயிர் எழுத்துகள் குறில். நெடில் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. குறில்எழுத்துகள் ஐந்தும் நெடில் எழுத்துகள் ஏழும் உள்ளன. இவற்றின் ஒத்த தன்மையைக் கொண்டு இன எழுத்துகளாகப் பிரிப்பர்.
அ ஆ
இ ஈ
உ ஊ
எ ஏ

ஒ ஓ
ஒள


நெடில் எழுத்தாக; உள்ள ஐ, ஒள ஆகியவற்றுக்கு இனமான குறில் எழுத்துகள் இல்லை.

மெய் எழுத்துகளில் ஆறு மெல்லின எழுத்துகளும் ஆறுவல்லின எழுத்துகளுக்கு இன எழுத்துகளாக உள்ளன. மெய்எழுத்துகளில் இன எழுத்துகள் பின்வருமாறு அமையும்.

க் ங் தங்கம்
ச் ஞ் பஞ்சு
ட் ண் நண்டு
த் ந் பந்து
ப் ம் பாம்பு
ற் ன் கன்று


இந்தச் சொற்களில் உள்ள மெய் எழுத்துகளைக் கவனியுங்கள், இவற்றில் ங்க, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று என்று வந்துள்ளதைக் கவனியுங்கள். இந்தச் சொற்களில் மெய்எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் அடுத்தடுத்து வந்துள்ளன. முன்பு உயிர் எழுத்துகளில் இன எழுத்துகளைப் பார்த்தோம். இவை மெய் எழுத்துகளில் இன எழுத்துகள் ஆகும். க, ச, ட, த, ப, ற என்ற வல்லின எழுத்துகள் ஆறும் தனியே ஒலிக்கும் போது வன்மையாக ஒலிக்கும். மேலேகாட்டியபடி சொற்களில் மெல்லின எழுத்துகளை ஒட்டிவரும்போது இவை மென்மையாகவே ஒலிக்கும். வல்லின எழுத்தை ஒட்டி வரும்போது வன்மையாக ஒலிக்கும்.

சங்கு பக்கம்
நஞ்சு நச்சு
பண்டம் பட்டம்
மந்தி கத்தி
பம்பரம் கப்பல்
இன்று நேற்று



மேலே காட்டப் பட்டுள்ள சொற்களில் இடப்பக்கம் உள்ளவை மென்மையாகவும் வலப்பக்கம் உள்ளவை வன்மையாகவும் ஒலிக்கும் என்பதை ஒலித்துப் பாருங்கள்.

3.1.6 சுட்டு எழுத்துகள்

ஒரு பொருளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்குப் பயன்படும் எழுத்துகள் சில உள்ளன. பின்வருவனவற்றைப் படியுங்கள்:

அவ்வீடு, இப்புத்தகம், அம்மரம், இப்பூனை

மேலே, வீடு, புத்தகம், மரம், பூனை முதலிய சொற்களுக்குமுன் அ, இ ஆகிய எழுத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தஎழுத்துகள் பொருள்களைச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன.ஒரு பொருளின் பெயருக்குமுன் இந்த எழுத்துகள் வந்து, அந்தப்பொருளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டப் பயன்படுகின்றன. ஒரு தென்னந்தோப்பில் நூற்றுக்கணக்கான தென்னைமரங்கள் நிற்கும். மரங்கள் என்று சொன்னால் அது அந்தத் தோப்பில் உள்ள மரங்களைக் குறிக்கும். மரம் என்றால் அது தோப்பில் உள்ள ஏதோ ஒரு மரத்தைக் குறிக்கும். அம்மரம் என்று சொன்னால் அத்தோப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட மரம் சுட்டிக் காட்டப்படுவதை நாம் உணரமுடியும். இவ்வாறு சுட்டிக்காட்ட உதவும் எழுத்து, சுட்டு எழுத்து எனப்படும். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள்ஆகும். உ என்ற சுட்டு எழுத்து, தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை.

உதுக்காண், உவன், உங்கே

என்ற இடங்களில் உகரம் சுட்டு எழுத்தாக வந்துள்ளதைக் காணலாம். இக்காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டும் உகரச் சுட்டைப் பயன்படுத்துகின்றனர். மற்றபடி இக்காலத் தமிழ் மொழியில் உகரச் சுட்டு இடம்பெறுவதில்லை.

அ, இ, உம் முதல் தனிவரின் சுட்டே (66)

என்னும் நன்னூல் நூற்பா சுட்டு எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.

சேய்மைச் சுட்டு

அவ்வீடு, அக்கரை, அம்மரம், அக்குளம்

மேலே காட்டப்பட்ட எடுத்துக் காட்டுகளில், அவ்வீடு, அம்மரம் முதலியன தொலைவில் உள்ள பொருள்களைச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இதனைச் சேய்மைச் சுட்டு என்கிறோம். சேய்மை என்பது தொலைவு என்று பொருள்படும்.

அண்மைச் சுட்டு

இப்பூனை, இப்புத்தகம், இம்மாடு, இக்கட்டில்

இப்புத்தகம், இப்பூனை முதலியன அருகில் உள்ள பொருள்களைச் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவற்றை அண்மைச் சுட்டு என்கிறோம். அண்மை என்பது அருகில் என்று பொருள்படும்.

அகச்சுட்டு

அவன், இவள், அது, இது

இந்தச் சொற்களில் அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப்பொருளை உணர்த்தி வருகின்றன. இவை சொல்லுக்கு உள்ளேயேஇருக்கின்றன. அவன் என்பதில் ’அ’ என்ற சுட்டு எழுத்தைநீக்கிவிட்டால் ‘வன்’ தனியே நின்று பொருள் இல்லாமல் போய்விடும். எனவே இவற்றைச் சொல்லில் இருந்து தனியேபிரித்துக் காணமுடியாது. ஒரு சொல்லுக்கு உள்ளே இருந்து, சுட்டுப் பொருளையும் உணர்த்துவதால், இவற்றை அகச் சுட்டு என்று கூறுவர். அகம் என்பது உள்ளே என்று பொருள்படும்.

• புறச்சுட்டு

அவ்வீடு, இம்மனிதன், அக்குளம், இம்மாடு

மேலே காட்டியவற்றில் அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் வீடு, மனிதன் முதலியவற்றுடன் கூடி. ஒரே சொல் போன்று காட்சி தருகின்றன. எனினும் இவற்றைத் தனியே பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக மேலே உள்ள சொற்களில் சுட்டு எழுத்துகளை நீக்கிப் பார்க்கலாம்.

அ + வீடு
இ + மனிதன்
அ + குளம்
இ + மாடு


இவற்றில் சுட்டு எழுத்தை நீக்கிய பின் வீடு, மனிதன், குளம், மாடு ஆகிய சொற்கள் தனித்து நிற்கின்றன. இந்த எடுத்துக்காட்டுகளில் சொல்லுக்கு வெளியே இருந்து சுட்டு எழுத்துகள் சுட்டுப் பொருளை உணர்த்துவதால் இவை புறச்சுட்டு எனப்படுகின்றன, புறம் என்பது வெளியே என்று பொருள்படும்.

• சுட்டுத் திரிபு

அந்த மரம், இந்த வீடு, அந்த மாடு, இந்த ஆடு

மேலே காட்டிய எடுத்துக் காட்டுகளில் மரம், வீடுஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் அந்த, இந்த ஆகியவைசொல்லுக்கு வெளியே தனியே நின்றுள்ளன. இவைஅடிப்படையில் அ, இ என்ற சுட்டு எழுத்துகளே. ஆனால் இங்கு அந்த, இந்த என்று மாறியுள்ளன. இவை தம் வடிவத்திலிருத்து திரிந்து, பொருளைச் சுட்டுகின்றன. எனவே இவற்றைச் சுட்டுத்திரிபு என்று கூறுவர்.

3.1.7 வினா எழுத்துகள்

அ, இ ஆகிய எழுத்துகள் சுட்டுப் பொருள் தருவதுபோலவே, சில எழுத்துகள் வினாப் பொருளைத் தருகின்றன.கீழே உள்ளவற்றைக் கவனிக்க. வினா என்பதும் கேள்வி என்பதும் ஒரே பொருள் தருவன.

யார்? எங்கு? நீயா?

இந்தச் சொற்கள் வினாப் பொருள் தருவதை உணரலாம். தமிழில் ஆ, எ. ஏ. ஓ, யா ஆகிய எழுத்துகள், வினாப் பொருள்தரும் எழுத்துகள் ஆகும், இவை வினாப் பொருள் தருவதால்வினா எழுத்துகள் எனப்படுகின்றன, வினா எழுத்துகள் ஒருசொல்லைச் சார்ந்தே வினாப் பொருள் தரும். இவற்றில் எ, யா ஆகிய இரு எழுத்துகளும் ஒருசொல்லுக்கு முதலில் வந்து வினாப் பொருள் தரும்,

எப்படி? எவ்வரிசை? எம்மனிதர்? யார்? யாது?

ஆ, ஓ ஆகிய இரு எழுத்துகளும் சொல்லுக்கு இறுதியில் வந்து வினாப் பொருள் தரும்.

நானா சொன்னேன்? - ஆ
அவனா தருவான்? - ஆ
நானோ கள்வன்? - ஓ
அவர் வருவாரோ? - ஓ

ஏ என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும்வந்து வினாப் பொருள் தரும்.

ஏன், ஏது யாரே அனுபவிப்பார்

எ, யா, முதலும் ஆ, ஓ. ஈற்றும் ஏ, இருவழியும் வினா ஆகும்மே (67)

என்னும் நன்னூல் நூற்பா வினா எழுத்துகள் எவை என்றுகுறிப்பதுடன் சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகளையும் இறுதியில் வரும் வினா எழுத்துகளையும் முதலிலும் இறுதியிலும்வரும் வினா எழுத்தையும் குறிப்பிடுகிறது.

• அகவினா
சுட்டு எழுத்துகளைப் போலவே சொல்லுக்கு உள்ளே இருந்து வினாப் பொருளை உணர்த்துவது அகவினா எனப்படும்.

ஏன்? யார்? என்ன? எங்கு?

மேற்கண்ட சொற்களில் வினா எழுத்துகளை நீக்கிவிட்டால், அச்சொற்கள் பொருள் தர மாட்டா. ஆகவேஇவை அக வினா எனப்படுகின்றன.

• புறவினா
வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து, வினாப்பொருளைத் தந்தால் அது புறவினா எனப்படும்.

எம்மரம்? எ+மரம்
எப்படி? எ+படி
அவளா? அவள்+ஆ
நின்றானா? நின்றான்+ஆ
தருவாளா? தருவாள்+ஆ


மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில், வினாப் பொருள் தரும் எ, ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கிவிட்டாலும் இந்தச் சொற்கள் பொருள் தரும்.